Wednesday, May 16, 2012

ABC of Exercises

             
It is time to move your lazy bones and start exercising as it is worth the time. A popular myth is that exercising is painful and hence many back out from their exercise regimes. The fact is exercise doesn't have to hurt to help you get in shape. Expect muscle soreness initially that will taper gradually. A few facts about exercises:

• If you are a beginner without a supervisor for your regime, try including walking, weight lifting and yoga in your regime. This combo is considered a balanced plan as it includes cardio, strength training and flexibility training respectively.
• There is no hard and fast rule to do cardio before muscle strengthening as it depends on the goal you set. Just make sure you get enough of both the exercises by the end of the week.
• Remember to warm up before exercise and cool-down after you exercise. A warm up prepares your muscles and helps prevent injury. Cool-down period helps your body recover from the workout and also continues a low-intensity exercise session.
• Set a target of 50-85% of your heart rate while exercising to achieve maximum benefits.
[Note: maximum heart rate=220 minus your age. 50-85% of that number is your target heart rate. Measure your heart rate by counting your pulse.]
• It is important to stay hydrated while exercising. Drink about 250-300 ml of water every 20-30minutes while exercising.
• A good way to strengthen and tone your muscles is by working your muscles to the point of tiredness. But remember to do it under a trained supervisor to avoid accidents.
• Spot reduction is a myth. Do activities for entire body to lose fat and weight from a specific area.
• Adding yoga for warm up or cool-down exercises can improve flexibility, strength and balance.
• Pick a time of day you can stick with.


Time to start exercising and stay in shape as... Shape Works!

Saturday, May 12, 2012

சுய உந்துதலே குழந்தையின் ஊட்டச்சத்து!

இவ்வுலகில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள, மனிதனுக்கு துணைபுரியும் ஒரு மாபெரும் அம்சம் சுய உந்துதல். இவ்வுலகில் பிரளயம், பூகம்பம் மற்றும் இன்னபிற இயற்கைப் பேரிடர்கள் பல ஏற்பட்டாலும், இந்த சுய உந்துதலே ஒவ்வொரு உயிரினத்தையும் நிலைத்து பிழைக்கச் செய்கிறது. மத நூல்கள் உட்பட, பலவிதமான நன்னெறி நூல்களிலும் இந்த சுய உந்துதல் போதிக்கப்பட்டுள்ளது.

* உலகின் ஒவ்வொரு சாதனையாளரையும் சாதிக்க வைத்தது இந்த சுய உந்துதலே.
* மூட நம்பிக்கையால் சீரழிந்து கிடந்த சமூகத்திற்கு பகுத்தறிவையும், மனித முயற்சிகளின் மாண்பையும் உணர்த்தி, ஏமாற்றுக் கூட்டத்தாரிடம் இருந்து மக்களைப் பாதுகாக்க புத்தரைத்(உலகின் ஜோதி) தூண்டியது சுய உந்துதல்தான்.
* இந்த சுய உந்துதல் என்பது ஒரு மனிதனை சாதாரண நிலையிலிருந்து அசாதாரண நிலைக்கு மாற்றுகிறது. இந்த உந்துதல்தான் நமது உள்ளார்ந்த திறன்களை நமக்குப் புரியவைத்து, நமது பலவீனங்களை மறக்கச் செய்கிறது.
* உங்களின் குழந்தை சாதனையாளராக வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், இந்த சுய உந்துதல் பண்பை உங்கள் குழந்தையிடம் ஏற்படுத்தவும்.
* ஒவ்வொரு குழந்தையும் இயற்கையிலேயே ஓரளவு சுய உந்துதல் பண்போடுதான் பிறக்கின்றன. ஏனெனில், அந்தப் பண்பு, ஒரு மனிதன் உயிரோடு வாழ்வதற்கான அடிப்படை சக்தியாகும்.

குழந்தையின் சுய உந்துதலை அதிகரிப்பதற்கான சில முக்கிய யோசனைகள்

* வீட்டில், ஆரோக்கியமான, ஆர்வமூட்டும் கற்றல் சூழலை குழந்தைக்கு ஏற்படுத்திக் கொடுக்கவும்.
* உங்கள் குழந்தையின் மூளையானது, எப்போதுமே நேர்மறையான செயல்பாடுகளில் ஆழந்திருக்கும்படி வாய்ப்புகளை உருவாக்கவும்.
* நேர்மறை எண்ணம் உள்ளவர்களுடன் மட்டுமே உங்களின் குழந்தையை பழக விடவும். எதிர்மறை எண்ணம் கொண்டவர்களின் தொடர்பைத் தவிர்க்கவும்.
* தனக்குள்ளேயே முடியும் - நம்மால் முடியும் என்ற வகையில் பேசிக் கொள்வது சுய உந்துதலை அதிகரிப்பதற்கான வழியாகும்.
* உங்கள் குழந்தையிடம் எப்போதுமே படைப்பாக்க சிந்தனைகளைத் தூண்டவும். ஏற்கனவே இருக்கும் விஷயங்களையே திரும்ப திரும்ப பேசி சிலாகிப்பதை விட்டுவிட்டு, புதிதாக உருவாக்கும் எண்ணத்தை குழந்தையிடம் உருவாக்கவும்.
* உலகில் புதிதாக சாதனைப் புரிந்தவர்கள், படைப்பாளிகள், புகழ்பெற்ற தலைவர்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அனுபவக் குறிப்புகளை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தவும்.

பெற்றோர் பங்கு

ஒரு குழந்தையின் சுய உந்துதல் மேம்படுவதில் பெற்றோரின் பங்கு பற்றி விழிப்புணர்வு அவசியம் இருக்க வேண்டும். ஏனெனில், குழந்தையின் முதல் ஆசிரியர்கள் பெற்றோர்தான். பள்ளியில் ஒரு குழந்தைக் கற்பதைவிட, பல மடங்கு வாழ்க்கைப் பாடங்களை வீட்டில்தான் கற்றுக்கொள்கிறது. எனவே, வீடு மற்றும் சுற்றியுள்ள சமூக சூழல்களில்தான் ஒரு குழந்தையின் மனப்பாங்கு உருவாக்கப்படுகிறது.
ஒரு குழந்தையின் திறன் மேம்பாட்டினால் அது பெரும் நற்பெயரில், பெற்றோர்களுக்கு சமபங்கு கிடைக்கிறது. எனவே அதற்கேற்ப பெற்றோர் தங்களின் செயல்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும். எதிர்மறை செயல்பாடுகளைத் தவிர்த்து, உங்கள் குழந்தையிடம் நேர்மறையாகவே செயல்படுங்கள். குழந்தை செய்யும் தவறுகளைத் திருத்துவதில் நேர்மறை அணுகுமுறையைக் கடைபிடியுங்கள். கடுமையான அணுகுமுறையைத் தவிர்க்கவும். உங்களிடமிருந்து கிடைக்கும் உற்சாகம், பாராட்டுதல்கள் மற்றும் பரிசுகளை குழந்தைகள் எப்போதுமே எதிர்பார்க்கின்றன. உங்களின் குழந்தை அசாத்திய அறிவைக் கொண்டிருக்கவில்லை என்றாலும்கூட, உங்களின் அணுகுமுறையே அவர்களை சிறப்பானவர்களாக மாற்றிவிடும். ஏனெனில் எல்லாக் குழந்தைகளுமே பிறவி மேதைகளாகப் பிறப்பதில்லை. உங்கள் குழந்தையின் வளரும் செயல்பாட்டில் நீங்களும் எவ்வளவோ கற்றுக்கொள்கிறீர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.




உலகம் கைப்பற்றுவதற்கே!

மனச் சிறையிலிருந்து உங்கள் குழந்தையை விடுதலைப் பெறச் செய்யுங்கள். சுதந்திரமான மற்றும் தனித்துவம் வாய்ந்த சிந்தனைகள் உங்கள் குழந்தையிடம் பெருகி வரட்டும். இளம் வயதிலேயே செயல்பட உங்களின் குழந்தைக்கு கற்றுக் கொடுக்கவும். உங்களின் இல்லமானது, போக்குவரத்து தடைகளற்ற ஒரு சீரான மற்றும் விசாலமான நெடுஞ்சாலைப் போன்று இருக்க வேண்டும். இதற்கு அர்த்தம் என்னவென்றால், அவர்களின் புத்தாக்க சிந்தனைகளுக்கு வேண்டாத கட்டுப்பாடுகளை சுமத்தக்கூடாது என்பதுதான். அந்தக் கட்டுப்பாடுகள் உங்கள் குழந்தைக்குள் ஒரு மேதை உருவாவதை தடுத்துவிடும்.
உங்கள் குழந்தையைப் பொறுத்தவரை, உலகம் என்பது வெல்வதற்கானது! மாறாக, அடங்கி வாழ்வதற்கல்ல.

அவர்களே செய்யட்டும்

உங்கள் குழந்தைகளுக்கான வேலையை அவர்களையே செய்ய விடுங்கள். சில தடுமாற்றங்கள் ஆரம்பத்தில் இருந்தாலும், எல்லாம் போகப் போக சரியாகிவிடும். உங்களின் குழந்தை ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், தடை செய்யாதீர்கள். அந்த விஷயத்தின் அடிப்படைகளை சொல்லிவிட்டு, அவற்றை குழந்தையே செய்ய அனுமதியுங்கள். அடிக்கடி போய் நச்சரிக்காதீர்கள். உங்களது பாணியையே பின்பற்ற வேண்டும் என்றும் நினைக்க வேண்டாம். உதாரணமாக, ஒரு குழந்தை சமையல் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால், அதற்கான முயற்சிகளுக்கு அனுமதியுங்கள். விளைவுகள் விரும்பியபடி இல்லாவிட்டாலும், கவலையில்லை. நாளாவட்டத்தில், உங்களின் குழந்தை நன்றாக சமைக்கப் பழகியிருக்கும்.

தோல்விகூட புதுவகை வெற்றிக்கு வழி

உங்கள் குழந்தையின் செயல்பாட்டில் ஏற்படும் தோல்விகளை எண்ணி வைத்துக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் குழந்தைப் பருவத்தை நினைத்துப் பார்த்தால், உங்களின் தவறுகள் நினைவுக்கு வரும்.
சில சமயங்களில் தவறுகள்கூட புதிய செயல்முறைகளுக்கு வழிவகுக்கும். பல விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் தவறான செயல்பாடுகள் புதிய சாதனைகளுக்கு வித்திட்டுள்ளன. உங்களின் குழந்தை தனது செயல்பாட்டில் சிறுசிறு தவறுகள் செய்வதால் உலகமே ஒன்றும் தலைகீழாகி விடப்போவதில்லை. எனவே, குழந்தையின் தவறுகளை எக்காரணம் கொண்டும் தூற்றாதீர்கள்.
உங்கள் குழந்தை ஒரு ரோபோவாக இருக்க முடியாது. அது தனித்துவமாக செயல்பட வேண்டுமெனில், தனது முயற்சிகளில் புதுப்புது அம்சங்களை செய்து பார்க்கும். அதை தடைசெய்யாதீர்கள்.

உங்கள் குழந்தை நீங்கள் அல்ல!
"உங்கள் குழந்தை உங்களின் வழியாக பிறக்கிறதே தவிர, அது நீங்கள் அல்ல"

என்று ஒரு பொன்மொழி உண்டு.
எனவே, உங்களின் ஆசை-அபிலாஷைகளை அதனிடம் திணிக்க வேண்டாம். ஏனெனில் அவர்கள் தனித்துவமான அம்சங்களுடன் உலகில் பிறக்கிறார்கள். உங்களைப் போன்றே அவர்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களின் வழி எதுவோ, அதில் அவர்களை செல்ல விடுங்கள்.

இலக்கு நிர்ணயித்தல்

ஒவ்வொருவரின் வாழ்விலும் ஏதாவது ஒரு வகையான இலக்கு இருந்துகொண்டே இருக்கும். இலக்கு இல்லாவிட்டால், மனித வாழ்வு சுத்தமாக கலையிழந்துவிடும். ஒவ்வொருவரின் வாழ்விலும் இலக்கு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். மனித வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் இலக்கை மையமாக வைத்தே இயங்குகிறது.
உங்கள் குழந்தைக்கும் ஆரம்பத்திலிருந்தே ஏதேனும் ஒரு இலக்கைக் கொடுத்துப் பழக்குங்கள். அந்த இலக்கை முடித்தவுடன், பரிசுகளையும், பாராட்டுகளையும் வழங்குங்கள். அதேசமயத்தில், கொடுக்கப்படும் இலக்கானது குறிப்பிட்ட காலத்தில் அடையக்கூடியதாக இருக்கட்டும். குழந்தை, மிரண்டு போகுமளவிற்கு எந்த இலக்கையும் தந்துவிட வேண்டாம்.
இலக்கை நிர்ணயித்துப் பழக்குவதன் மூலம், பிற்காலத்தில், தனது லட்சியத்தை அடைய, குழந்தைகள் தங்களுக்குப் பொருத்தமான இலக்கை, தாங்களே நிர்ணயித்துக் கொள்வார்கள்.

குறிப்பு

ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு சூழ்நிலை இருக்கும். அதன்மூலம் பெற்றோர் மற்றும் குழந்தையின் வாய்ப்புகளும் மாறுபடும். குழந்தையின் சுதந்திர சிந்தனையை வளர்ப்பது என்றால், அதன் இஷ்டத்திற்கு விட்டுவிடுவதல்ல. நல்லது - கெட்டதை சரியாக புரிய வைப்பது பெற்றோர்களின் கடமை. உலகின் நிலையை தெளிவாக அவர்களுக்குப் புரிய வைப்பதும், சமூகத்தின் சவால்களை தெரிய வைப்பதும் முக்கியமானவை. அப்போதுதான் ஒரு குழந்தை சுதந்திரமாக செயல்படும்போது, சரியான பாதையில் செல்லும். இல்லையெனில், சுதந்திரம் என்ற பெயரில், ஒரு குழந்தையின் எதிர்காலம் முற்றிலும் சீரழிந்துவிடும். ஏனெனில், நம்மைச் சுற்றிலும் நல்ல விஷயங்களைவிட, தீமைகளே எங்கும் நிறைந்துள்ளன என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.

(courtacy : Dinamalar)

உங்களின் குழந்தை ஒரு மேதை!-

உங்களின் குழந்தை தற்போது வெற்றிகரமான வாழ்க்கை என்னும் மாபெரும் கடலின் கரையில் நின்று கொண்டுள்ளது. அந்தக் கடலை கடப்பதற்கு உங்களின் குழந்தைக்கு 3 விதமான அம்சங்கள் கட்டாயம் தேவை. அவை,

படைப்பாக்க ஆர்வம்(Creative curiosity)
ஊக்கமளிக்கப்பட்ட கற்பனைத்திறன்(Inspired imagination)
சுதந்திரம்(Independence)

ஒரு குழந்தை வெற்றிகரமான மனிதனாக உருவாதலில், இந்த மூன்று அம்சங்களும் முக்கியப் பங்கை வகிக்கின்றன.
உங்கள் குழந்தையின் செயல்பாடுகள் மீதான உங்களின் அணுகுமுறை தொடர்பாக ஆராய, சில கேள்விகள் இங்கே கேட்கப்பட்டுள்ளன. அவற்றை கவனமாகப் படிக்கவும்.

* பிஸ்கட்டுகள் நிறைந்த ஒரு டப்பாவை உங்களின் 2 வயது குழந்தை திறக்க முயற்சிக்கும்போது, நீங்கள் அதைக் கண்டித்து, குழந்தையிடமிருந்து டப்பாவை பிடுங்கி விடுவீர்களா?
* உங்கள் குழந்தை சகதியில் விளையாடிக் கொண்டிருந்தால், சத்தம்போட்டு, குழந்தையை சுத்தப்படுத்தி, வீட்டிற்குள், சுத்தமான பொம்மைகள் நிறைந்துள்ள இடத்தில் விடுவீர்களா?
* நீங்கள் சமையல் வேலையில் மும்முரமாக இருக்கையில், உங்கள் குழந்தை சில காலி அட்டைப் பெட்டிகளை வெளியில் எடுக்கும் சத்தம் கேட்டு நீங்கள் அங்கு சென்று பார்க்கையில், மேலும் ஒரு அட்டைப் பெட்டிக்காக உயரமான அலமாரியில் உங்கள் குழந்தை ஏறிக்கொண்டுள்ளது. இதனால் கோபம் கொண்டு குழந்தையை கடிந்துகொண்டு, அந்த இடத்திலிருந்து குழந்தையை அப்புறப்படுத்தி, தொலைக்காட்சியை இயக்கி அதன் முன்பாக குழந்தையை அமர வைப்பீர்களா?
* உங்களின் குழந்தை தொலைக்காட்சியின் முன்பாக அமர்ந்து, கார்டூன் சேனல்களையோ அல்லது வர்த்தக விளம்பரங்களையோ ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தால், உங்கள் குழந்தையைப் பார்த்து, சமர்த்து என்று சொல்வீர்களா?
* ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கையிலேயே, வேறொரு நாற்காலியை இழுக்கும்போதோ, தொலைக்காட்சி சேனலை மாற்றும்போதோ அல்லது இடத்தை விட்டு இறங்கி வேறு எதையாவது தேடி அலைந்து திரியும்போதோ, நீங்கள் பொறுமையை இழந்து, குழந்தையை அதட்டி அதன் பழைய இடத்திலேயே அமர வைப்பவரா?
* உங்களின் உதட்டு சாயத்தை(Lipstick) குழந்தைப்பார்த்து, அதை எடுத்து தனது உடலில் சாயம் பூசிக்கொண்டு இருப்பதைப் பார்த்தால் நீங்கள் பொறுமையை இழக்கிறீர்களா?
* உங்களின் பத்து வயது பிள்ளையானது, பல வண்ணங்களில் ஒரு கோணல்மானலான படத்தை வரைந்து வந்து உங்களிடம் காட்டினால், நீங்கள் அதை சில நொடிகள் கடமைக்காக பார்த்துவிட்டு, Good என்று சொல்லிவிட்டு, மீண்டும் உங்கள் வேலையில் ஆழ்ந்து விடுவீர்களா?
* உங்கள் குழந்தை வரைந்ததை என்ன என்று கேட்டு, அதற்கு ஏதேனும் ஒரு மிருகத்தையோ, பறவையையோ அல்லது பொருளையோ உங்கள் குழந்தை சொன்னால், அதைக்கேட்டு ஏளனமாக சிரித்து, குழந்தை சொன்னதை மறுப்பீர்களா?
* உங்கள் 12 வயது குழந்தை உங்களிடம் வந்து, தான் ஒரு விஞ்ஞானியாக போகிறேன் அல்லது தத்துவ ஞானி ஆகப் போகிறேன் என்று சொன்னால், அது மிகவும் கஷ்டம் அல்லது முடியாத காரியம் என்று சொல்பவரா நீங்கள்?
* உங்கள் 6 வயது பெண் குழந்தை, தனது அண்ணனின் துப்பாக்கி பொம்மை அல்லது கட்டுமான அமைப்பை எடுத்து விளையாடினால், நீங்கள் அவளிடம் இது பெண்களுக்கானதல்ல, எனவே உனக்கான பொம்மையை எடுத்து விளையாடு என்று சொல்பவரா?
மேற்கண்ட 10 கேள்விகளுக்கு உங்களின் பதில் NO என்று இருந்தால், நீங்கள் ஒரு PERFECT பெற்றோர். உங்கள் குழந்தை மேதையாக ஆகும் செயல்பாட்டில், நீங்கள் முழுமையாக ஒத்துழைக்கிறீர்கள் என்று அர்த்தம்.
அதேசமயம், 7 முதல் 9 வரை உங்களின் பதில்கள் NO என்று இருந்தால், உங்கள் குழந்தையின் மேம்பாட்டிற்கான வாய்ப்பு இன்னும் இருக்கிறது என்று அர்த்தம். எனவே, உங்களின் இதர பலவீன பகுதிகளை சரிசெய்து கொள்ளுங்கள்.
மேற்கண்ட கேள்விகளுக்கு 6 மற்றும் அதற்கும் குறைவாக உங்களின் பதில் NO என்று இருந்தால், உங்கள் குழந்தையின் மேதமை வளர்ச்சியை நீங்கள் தடுக்கிறீர்கள் என்று அர்த்தம். எனவே, உங்களின் மனநிலை மற்றும் தன்மையை நீங்கள் நிச்சயம் மாற்றிக்கொள்ள வேண்டும்.

உங்களின் குழந்தை மேதையாக மாறுதல்

ஒரு மேதை என்பவர் படைப்புத்திறன் உள்ளவர். அவர் வெறுமனே விஷயங்களை எளிதாக புரிந்து கொள்பவர் அல்ல. அவர் ஒரு தனித்தன்மை வாய்ந்தவர். அவர் தனக்கான ஒரு தனித்தன்மையை இந்த சமூகம் மற்றும் இந்த உலகிலிருந்து பெறுகிறார். எனவே, ஒரு குழந்தையின் படைப்புத்திறன் பெரியளவில் எழுச்சிப் பெறுவதற்கு, படைப்பாக்க ஆர்வம், கற்பனை மற்றும் சுதந்திரம் ஆகியவை அதற்கு கட்டாயம் தேவை.

படைப்பாக்க ஆர்வம்

படைப்புத்திறனுக்கான அடிப்படை தன்மையாக இந்த படைப்பாக்க ஆர்வம் திகழ்கிறது. படைப்புத்திறனை உங்கள் குழந்தையினுள் உருவாக்க, பலவித விஷயங்களைப் பற்றி கேள்விக் கேட்கும் பழக்கத்தை தூண்டுங்கள். குழந்தையானது, புதிய அனுபவங்களை பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குங்கள். இதன்மூலம் அக்குழந்தைக்கு புதிய எண்ணங்கள் பிறக்கும்.
ஒரு குழந்தை கேள்வி கேட்கும்போது, உங்களின் முழு கவனத்தையும் அதன்பால் செலுத்தவும். ஏனெனில் இதில் ஒரு முக்கிய அம்சம் இருக்கிறது. பெரியவர்களை மதிக்க வேண்டும் என்று சிறுவர்களுக்கு பொதுவாக கற்றுத் தரப்படுகிறது. நாமும் அதைத்தான் அவர்களிடம் சொல்கிறோம். ஆனால் நாம் ஒன்றை யோசித்துப் பார்க்க வேண்டும். நாம் சிறுவர்களாக இருந்தபோது, நம்மை உதாசீனப்படுத்திய பெரியவர்களை நாம் விரும்பியிருக்கிறோமா? அல்லது மனதுக்குள் மதித்திருக்கிறோமா? எனவேதான், குழந்தைக்கான முக்கியத்துவத்தை நாம் நிச்சயம் வழங்கியாக வேண்டும்.
உங்கள் குழந்தையை வெளியே அழைத்துச் செல்லும்போது, கண்ணால் காணும் காட்சிகள் தொடர்பாக கேள்விகள் கேட்கலாம். (உ.ம். அந்த மனிதர் ஏன் செடிக்கு நீர் ஊற்றுகிறார், நின்று கொண்டிருந்த கார் எவ்வாறு ஓடியது, ஏன் கடை வைத்திருக்கிறார்கள்)
இதன்மூலம் சிந்தனைத்திறன் மேம்படும். ஏன், எதற்கு என்று யோசிப்பார்கள். அதற்கு விடைகாண முயல்வார்கள்.

கற்பனை

பள்ளியில் ஒரு குழந்தைக்கு, வரலாறு, புவியியல், சமூகவியல், அறிவியல், கணிதம் போன்ற பல பாடங்களைப் பற்றிய அம்சங்கள் கற்பிக்கப்படுகின்றன. ஆனால் அவற்றுடன் கற்பனைத்திறன் சேர்வது மிகவும் முக்கியம். கற்பனையற்ற அம்சங்கள் என்பவை பசுமையில்லாத தாவரங்களைப் போன்றவை. எனவே, பாடத்திட்டத்தில், ஊக்கமளிக்கப்பட்ட கற்பனைத்திறன் என்ற அம்சம் கட்டாயம் இருக்க வேண்டும். ஏ¦னினில், படைப்புத்திறனின் ஆக்ஸிஜனாக இந்த ஊக்கமளிக்கப்பட்ட கற்பனைத்திறன் திகழ்கிறது. உதாரணமாக, ஒரு விஞ்ஞானி ஒரு விஷயத்தை முதலில் கற்பனை செய்து, பின்னர் அதை நிஜமாக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். அது தோல்வியடையும்போது, மீண்டும் வேறொரு கற்பனையை மேற்கொண்டு, தனது முயற்சியில் ஈடுபடுகிறார். இந்த செயல்முறைதான் அனைத்து வகை துறைகளிலும் இருக்கிறது.
உங்கள் குழந்தையின் கற்பனை சமயத்தில் அபத்தமாகவும், தவறாகவும் உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் அதற்காக அதை திட்டுவது அதைவிட அபத்தமானது. ஏனெனில், இதன்மூலம் கற்பனை செய்யவே பிற்காலத்தில் குழந்தை பயப்படும். ஏனெனில் இதுபோன்ற கற்பனைகள்தான் வருங்காலத்தில் செம்மையான சிந்தனைகளாக மாறும்.

சுதந்திரம்

ஒரு மேதைக்கு, சுதந்திரம் என்பது ஜீவ நீரைப் போன்றது. அந்த சுதந்திரத்திற்கு தடை ஏற்பட்டால், ஒரு இளம் மேதை தன்னை ஒரு நல்ல படைப்பாளியாக உருவாக்கிக் கொள்வதில் பலவிதமான சிக்கல்களை ஏற்படும். ஒரு வளரும் மேதைக்கு பெரியளவிலான புறக்கணிப்பு ஏற்படக்கூடாது. அப்போதுதான், அந்த மேதை இன்னும் புதிய விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும். ஒரு இளம் மேதையின் சுதந்திரமானது, பெற்றோர் காட்டும் அன்பு மற்றும் ஆதரவில்தான் அடங்கியுள்ளது.
பழைய நடைமுறைகள் மற்றும் விதிகளை மீறினால்தான் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும். அதுதான் உலக நியதி. எனவே, உங்கள் குழந்தை அந்த விதிகளை மீறினால், நீங்கள் அதிர்ச்சியடையாமல், ஆச்சர்யமடைந்து, உங்களின் குழந்தையை ஊக்குவிக்க வேண்டும்.
An Elegy Written in the Country Churchyard என்ற ஆங்கில கவிதையில், தாமஸ்கிரே(Thomas Gray) என்ற கவிஞர், ஒரு கிராமத்து மயானத்தில் நின்று கல்லறைகளைப் பார்த்து இவ்வாறு பாடுவார்,

அமைதியாய் உறங்குபவர்களே,
உங்களுக்கு மட்டும் வாய்ப்பு கிடைத்திருந்தால்
உங்களில் பலர் மில்டன்(இலக்கிய சாதனையாளர்) போன்றோ,
ஆலிவர் கிராம்வெல்(அரசியல் புரட்சியாளர்) போன்றோ
ஆகியிருப்பீர்கள்!
ஆனால் உங்களின் சூழலுக்கு நீங்கள்
பலியாகிவிட்டீர்கள்.
வறுமையும், வாய்ப்புகள் கிடைக்காமையும்
உங்களின் சாதனையை தடுத்துவிட்டன.
உங்களின் அபூர்வ திறமைகள் அனைத்தும்
வெளிவராமலேயே வீணாகிவிட்டன.
ஐயோ! என்ன கொடுமை இது!



நமது குழந்தைகள் பலருக்கும் இதே நிலைதான். வறுமை என்பது ஒரு சிறு தடைதான். அதை மீறி சாதனை புரிந்தவர்கள் எத்தனையோ பேர். முறையான ஆதரவு, உற்சாகமளித்தல், திறமையை கண்டுகொண்டு உதவுதல், சுதந்திரம் அளித்தல், சோதனைகள் வந்தாலும் குழந்தையின் பக்கமே இருத்தல் போன்ற பலவித உதவிகள் கிடைக்காமல் காணாமல் போகும் மேதைகள்தான் அதிகம்!
எனவே, அவர்களுள் ஒருவராக, உங்களின் குழந்தையும் ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

(Thanks to Dinamalar :)  )

கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும்

டாக்டர் தீப் (குழந்தைகள் மனநலம்), மதுரை: காலையில் குழந்தைகளை எழுப்புவது முதல், இரவில் தூங்கச் செய்வது வரை, அன்பான, ஆதரவான, அரவணைப்பைத் தரும் பெற்றோர்களாக இருக்க வேண்டும். சோகமோ, சந்தோஷமோ, காதலோ... எதுவாக இருந்தாலும், குழந்தைகள் முதலில் பெற்றோர்களிடம் தான் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப, பெற்றோர்களும் பிள்ளைகளிடம் மனம் விட்டு பேச வேண்டும். இருவர் வேலைக்குச் செல்லும் இடங்களில், வீட்டுக்கு வந்தால் கூட அலுவலகத்தை பற்றியே பேசுவர். பிள்ளைகள் பேச வந்தால் தடுத்துவிடுவர். வீட்டுக்கு வந்தால், அலுவலக சிந்தனைகளை தூக்கி எறியுங்கள். எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், உங்கள் பிள்ளைக்கு, சாதாரண அம்மா தான். ஒரு அம்மாவாக, அன்பு காட்டுங்கள். காலை எழுப்பும் போது, மென்மையான சொல்லை கையாள வேண்டும். மென்மையாக அணைத்து முத்தமிட்டால், குழந்தையின் உலகம் இனிமையாகி விடும். அந்த இனிமையை அனுபவிக்க விடுங்கள். படிப்பு மட்டுமே குழந்தைகளின் உலகமல்ல... ஓடியாடி உற்சாகப்படுவது தான் அவர்களது வாழ்க்கை.பள்ளிகளில் நூறு சதவீத தேர்ச்சி என்பது, ஆசிரியர்களின் இலக்காக இருக்கலாம். அதற்காக மதிப்பெண் பெறவைக்கும் இயந்திரமாக, மாணவர்களை நினைக்கக்கூடாது. வாழ்க்கைக் கல்வியை முதலில் கற்றுக் கொடுங்கள். ஆசிரியர்கள் பாடம் நடத்தும் விதத்தில் தான், மாணவர்களின் ஆர்வம் மாறுபடும். சிறுகதை, பாடல், எளிய செய்முறைகளுடன் பாடம் நடத்தினால், ஈடுபாட்டுடன் படிப்பர். கடனுக்காக, பாடத்தை நடத்தி முடிப்பதை விட, ஈடுபாடு, ஆர்வம், கடமை உணர்வுடன் பாடம் நடத்தினால், பள்ளிப்பருவம் கசக்காது.

(Thanks Dinamalar)

Sunday, May 6, 2012

ஒளிபடைத்த கண்ணினாய் வா...: உரத்த சிந்தனை, எஸ்.ரமா

பத்திரிகைகளில் அடிக்கடி வெளிவரும், ஓர் செய்தி... பள்ளி அல்லது கல்லூரி மாணவர்கள் தற்கொலை. பள்ளி இறுதி தேர்வில் தோற்பவர்கள், தற்கொலை செய்கின்றனர் என்பது போய், கஷ்டப்பட்டு படித்து, குடும்ப வறுமையோ, பிரச்னைகளோ பாதிக்காமல் வெற்றிகரமாக கிராமப் பள்ளிகளிலேயே, பள்ளி இறுதி வகுப்பை முடித்தவர்கள், பல்லாயிரம் கனவுகளோடு கவுன்சிலிங் மூலம் மிகச் சிறந்த கல்லூரிகளில் படிக்க இடம் கிடைத்து, சந்தோஷமாக ஆரம்பிக்கும் ஓர் அடுத்த கட்ட வாழ்க்கை, அற்பாயுசாக முடிக்கப்பட என்ன காரணம்?


ஆங்கில வழி கற்பித்தல் அல்லது பேசுதல் புரிந்து கொள்ள முடியவில்லையா? சக மாணவர்களின் கிண்டல், கேலி மனதை நோகச் செய்கிறதா அல்லது "அரியர்' வைப்பதால் தங்களால் வாழ்க்கையில் ஜெயிக்க முடியாமல் போய் விடுமோ என்ற பயத்தால், இந்த அவசர முடிவு எடுக்கின்றனரா? பள்ளி அல்லது கல்லூரித் தேர்வில் தோல்வியடைந்தால், வானம் தலையில் விழுந்து நொறுங்கப் போவதுமில்லை; உலகம் அஸ்தமித்து விடப் போவதில்லை. தோல்வியடைந்த மாணவர்களுக்குத் தேவை, காயம்பட்ட புண்ணிற்கு மருந்திடுவதைப் போன்ற ஆறுதல் வார்த்தைகளும், அடுத்த தேர்வை தன்னம்பிக்கையோடும், தைரியத்தோடும் எதிர்கொள்ள வைக்கும் ஊக்க வழிகளும் தான். இதை உணராமல் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல், பெற்றோர், தோழர்கள், ஆசிரியர்கள் நடந்து கொண்டால், வெளியுலக அனுபவமோ, பிரச்னைகளை எதிர்நோக்கும் வழிமுறைகளோ தெரியாத அப்பாவி மாணவச் செல்வங்கள், தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.


இது ஒருவித வெளிப்பாடு என்றால், இதற்கு நேர்மாறானது தான், நடத்தை முறை மாறுபாடு ஏற்படுவதும். பிறர் மீது தங்களால் காண்பிக்க முடியாத கோபத்தை, வெறுப்பை, தங்கள் மீதே திருப்பிக் கொள்வதன் மூலம், அதுவரை அவர்களுக்கு இருந்த குணநலன்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, எதற்கெடுத்தாலும், அடிதடி, ஆவேசம், கோபம், படிப்பை முழுதும் புறக்கணித்தல், தங்கள் கடமைகளை அடியோடு துறத்தல் போன்ற சமுதாயத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். இவை அனைத்திற்கும் காரணம், பருவ வயதில் பக்குவமடையாத இளையோர்களிடம் பிறர் நடந்து கொள்ளும் பண்பற்ற நடத்தைகளே. கற்றலில் மூன்று வகை உண்டு. தானே ஏட்டறிவு மூலம், ஞானத்தை வளர்ப்பது; ஆன்றோர்கள் கூறும் வழிமுறைகளை பின்பற்றி அறிவது; பிறர் வாழ்க்கையில் பார்த்து, தன்னை புடம் போட்டுக் கொள்வது. ஆனால், நான்காவதாக உள்ள பட்டறிவு தான், பலருக்கும் பலமாக உள்ளது. தானாகவும் கற்றுக் கொள்ள மாட்டேன்; பிறர் சொல்வதையும் கேட்க மாட்டேன்; அடுத்தவர் படுவதைப் பார்த்தும், நான் மாற மாட்டேன் என்றிருப்பவர்கள், தங்கள் வாழ்வில் அடிபட்டுத்தான் திருந்துவர்.


இக்கால பெரியோர்களிடம் நான் பார்த்து வருந்தும் ஓர் விஷயம், நான் செய்தால் சரி; மற்றவர், குறிப்பாக, வாரிசுகள் இளம் பருவத்தில் தவறு செய்தால், தவறு எனும் விதண்டவாத போக்கு. இதைத் தான், "தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்' என, வாதிடுவர் என்றனரோ? இக்கால மாணவர்கள், இன்டர்னல் மதிப்பெண்களை கணக்கில் கொண்டே பாடங்களை படிப்பதால், "சைக்கிள் டெஸ்ட்' எனப்படும் மாதத் தேர்வுகளை ஊன்றி படிப்பதில்லை. பள்ளிக் கல்லூரி மதிப்பெண்கள் தான், எதிர்கால வாழ்க்கை என்ற குறுகிய எண்ணம், மாணவர்கள் மனதிலிருந்து அடியோடு நீங்க வேண்டும். காரணம், ஆளுமைத்திறன், தனி மனித ஒழுக்கம், உண்மை, சமுதாயப் பண்பு, நேர்த்தியாக பழகும் முறை போன்ற குணநலன்களே, ஒருவரின் வெற்றிக்கு அடித்தளம். அதேபோல், ஒவ்வொரு பருவத்திலும் ஏற்படும் மாற்றங்களை, இயல்பாக எதிர்கொண்டு கடந்து வந்தால் தான், அடுத்த கட்ட வளர்ச்சி பரிணமிக்கும். மாற்றம் ஒன்று தான் நிரந்தரமானது; மாற்றத்திற்கு ஏற்ப, அதேநேரம் தனி மனிதப் பண்பையும் விடாமல் வளைந்து கொடுப்பவர்களே, வாழ்வில் வெற்றிப் பெற முடியும்.


சரி... இதை அடைவதற்கான வழி தான் என்ன? சுருக்கமாக, என்.எல்.பி., என அழைக்கப்படும், "நியூரோ லிங்கிஸ்டிக் புரோகிராமிங்' பயிற்சி முறைகள், மிகச் சுலபமாக மனிதர்கள் மனதில் மாற்றத்தை உண்டாக்க வல்லவை. தங்கள் பிரச்னைகளை வெளிப்படையாக கூற விரும்பாதவர்கள் கூட, தாங்கள் என்ன மனநிலையில் இருக்கின்றனர் என, இப்பயிற்சியாளரிடம் கூறினால், பாதிக்கப்பட்டவர் அதிலிருந்து விடுபட ஏற்ற பயிற்சி வழிகளை கொண்டு, அவர் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஒவ்வொரு கல்லூரியிலும், என்.எல்.பி., அறிந்த மனநில ஆலோசகர் கட்டாயமாக நியமிக்கப்பட வேண்டும். இது, ஏதோ பெயருக்கு கவுன்சிலர் என்றில்லாமல், முதலில் மனநல ஆலோசகர்களுக்கு அரசு அல்லது அந்தந்த கல்லூரி நிர்வாகம் மூலமே பயற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு, அவற்றை அவர்கள் குழு பயிற்சியாக, அனைத்து மாணவர்களுக்கும் வகுப்பு வாரியாக நடத்த வேண்டும்.


ஒவ்வொரு முதலாமாண்டு மாணவர்களுக்கும், "எவாலுயேஷன் பார்ம்' மனநல ஆலோசகரால் ஏற்படுத்தப்பட்டு, அதில் மாணவரின் தனிப்பட்ட விவரங்கள், பெற்றோர் மற்றும் குடும்பப் பின்னணி, கல்லூரி அல்லது விடுதியில் அவர்கள் சந்திக்கும் நிறை, குறைகள் மாதந்தோறும் பதியப்பட்டு, தேவைப்படுவோருக்கு தனிநபர் ஆலோசனையும், பொதுவாக குழுப் பயிற்சியும் மாதம் ஒரு முறை என, சுழற்சி முறையில் அனைத்து பாடப்பிரிவு மாணவர்களுக்கும் அளிக்கப்படுமானால், மாணவர்களின் தற்கொலை நிகழ்வுகள் தடுக்கப்படும். நம் ஆழ்மனம் எப்போதும், நேர்மறையாக மட்டுமே சிந்திக்கும்; எதிர்மறையான வார்த்தைகளை அது பதிய வைக்காது.


உதாரணமாக, முடியாது, தெரியாது, இல்லை, கூடாது போன்ற எதிர்மறையான வார்த்தைகளை, நம் ஆழ்மனம் நேர்மறையாகவே பதிவு செய்யும். இதனால் தான் குழந்தைகளிடமோ அல்லது பெரியவர்களிடமோ, "இதை செய்யாதே' என்றால், அவர்கள் அதைச் செய்வர். இதையே மாற்றி, என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோமோ அதைக் கூறினால், அது அவர்கள் மனதில் பதிந்து, நல்ல மாற்றத்தையும் உண்டு பண்ணும். எடுத்துக் காட்டாக, குழந்தைகளிடம், "மாடிப்படி ஏறாதே' என, கண்டிப்பதை விடுத்து, "மாடிப்படி ஏறும் போது ஜாக்கிரதையாக கைப்பிடிச் சுவரை பிடித்து ஏற வேண்டும்; அப்படி செய்தால், கீழே விழுந்து அடிபடுவதை தவிர்க்கலாம்' என, சொல்ல வேண்டும். இதேபோல் பெற்றோர், தங்கள் பிள்ளைகள், "படிப்பதே இல்லை' என குறை கூறுவது, அவர்கள் ஆழ் மனதில் பதிவதால், அவர்கள் அதுவரை எப்படி படிக்கின்றனரோ, அப்படியோ தொடர்ந்து படிக்கின்றனர்.


உண்மையில் மாணவர்களை விட, பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோருக்குத் தான், முதலில் இப்பயிற்சி முறைகள் வழங்க வேண்டும். அதேபோல், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, என்.எல்.பி., பயிற்சி முறைகள் கற்று தரப்பட்டால், வீடு, குடும்பம் விட்டு, விடுதியில் தங்கி படிக்கும் சூழல் ஏற்படும் போது, கல்லூரி பருவத்தில் மிக சுலபமாக, அந்த வாழ்க்கை முறைக்கு அவர்கள் மாறிக் கொள்வர். இன்று கல்வி என்பது, வியாபார நோக்குடனே பெரும்பாலும் அணுகப்படுவதால், படிப்பைத் தவிர, வேறெதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படாமல் பள்ளிக்காலம் முடிகிறது. இதனால், மதிப்பிற்கரிய மானுட உயிர், மிக மலிவாக துறக்கப்படுகிறது. இறந்த ஒவ்வொரு மாணவச் செல்வத்தை நம்பி, அக்குடும்பமும், சமுதாயமும் எத்தனை எதிர்பார்ப்புகளை, கனவுகளை சுமந்திருக்கும்... இதை துடைக்க வழி செய்யாமல், வல்லரசாக மாறி நாம் என்ன சாதிக்கப் போகிறோம்? இனியும் விழித்துக் கொள்ளா விட்டால், இழப்பு, குடும்பங்களுக்கு மட்டுமல்ல, நம் சமுதாயத்திற்கும் தான். இ-மெயில்: ramas_s@rediffmail.com


- எஸ்.ரமா, மனோதத்துவ நிபுணர்